EDUCATION

கடும் சிரமத்தை சந்திக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்...

By ASWATHTHAMAN N • 2026-10-07 09:19 • 4 views   Share WhatsApp Share Facebook Share X
கடும் சிரமத்தை சந்திக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம்...

சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகம் கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இது தரைத்தளம் மற்றும் எட்டு மாடிகளை உள்ளடக்கிய, முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட நூலகமாகும்.

சுமார் 8 ஏக்கரில் 6.25 லட்சம் புத்தகங்களைக் கொண்டுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், ஒரே நேரத்தில் 1,250 வாசகர்கள் அமரும் வகையிலான வசதிகளைக் கொண்டது. இப்படிப்பட்ட நூலகம் கடந்த திமுக ஆட்சியில் புதுப்பிக்கப்பட்டது. தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நூலகம் செயல்படும். புத்தகம் படிக்கும் பிரிவு இரவு 9 மணி வரை செயல்படும்.

வெளியூர் வாசகர்களுக்கு சிக்கல்

இப்படியான அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போட்டித்தேர்வுக்கு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது அதில் சிக்கல் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் முகவரியைக் கொண்ட ஆதார் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பிற அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் நூலக உறுப்பினராகும் வசதி உள்ளது.

அதேசமயம், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த வாசகர்கள் உறுப்பினராக வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு நோட்டரி பப்ளிக் வழக்கறிஞர் கையொப்பமிட்ட முகவரி அங்கீகாரச் சான்று சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்படுகிறது.

இதில், அண்ணா நூற்றாண்டு நூலக ஆண்டு உறுப்பினர் கட்டணம் வெறும் ரூ.200 மட்டுமே உள்ளது. அதேசமயம், நோட்டரி பப்ளிக் சான்றிதழுக்காக ரூ.500 வரை செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில இடங்களில் இந்த சான்றிதழுக்காக அதிக அளவில் பணம் கேட்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இது நியாயமற்ற செயல்முறை என வாசகர்கள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர். எனவே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களைப் போல தங்களுக்கும் ஆதார் அல்லது ஆவண அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சென்னையிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் உள்ள விடுதிகள், பணம் செலுத்திப் பெறும் தங்குமிடங்கள் அல்லது தனிநபர் அறைகளில் தங்குவதால், அவர்களிடம் உள்ளூர் முகவரிச் சான்று இருப்பதில்லை.

உறுப்பினர் அட்டை கிடைக்காமல் போவதால் புத்தகங்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால், புத்தகங்களை படிக்க பல கிலோமீட்டர் தூரம் பயணித்து வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.

##latestupdate
ASWATHTHAMAN N 0 followers